நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பார்க்காத முடிவுகள் வந்ததில் இருந்து நிறைய கோணங்களில் பகுப்பாய்வுகள் நடக்கின்றன. மக்களிடத்திலும் அறிவுத்தளச் செயற்பாட்டாளர்களிடத்திலும் உரையாடுவதில் நமக்கு எழும் சிந்தனைகளையும் கருதுகோள்களையும் அவ்வப்போது எழுதி ஆய்வுக்கு உட்படுத்துவதில் சிலவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.
தலித்திய வாதம்
திமுகவின் தோல்விக்குச் சொல்லப்படுகின்ற வாதங்களில் ஒன்று – தலித் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள திமுக தவறிவிட்டது என்பதாகும்.
கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு திமுக அரசாங்கம் நிறைவேற்றிய திட்டங்களை வரிசைப்படுத்தி விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார். அந்தத் திட்டங்களில் நிறைய தலித்துகள் பயனும் அடைந்துள்ளனர். ஆனாலும் அவை அம்மக்களின் aspirationsக்கு போதுமானதாக இல்லை என்று தலித்தியவாதிகள் கூறுகின்றனர். அவர்களது பிரதான வாதமே தலித்களின் பிரதிநிதித்துவம் தான்.
திட்டங்கள் தலித் அறிவுத்தளவாதிகளுக்கு மன நிறைவைத் தராததற்குக் காரணங்கள் என்ன?
எவ்வளவு திட்டங்கள் கொடுத்திருந்தாலும் அவற்றைச் செயல்படுத்தியது இடைநிலைச் சாதிக்காரர்கள் தான் என்கின்றனர்.
திமுகவினர் சிலர் அத்திட்டங்களைக் கொடுத்ததே நாங்கள் தான் என்று சொல்லும்போது ஆண்டான் அடிமை மனநிலையை வெளிப்படுத்துகின்றனர் என்கின்றனர்.
அவர்கள் கொடுப்பதைப் பெற்றுக் கொண்டு நிறைவு கொள்ள முடியாது. எங்களுக்கானவற்றை நிறைவேற்ற எங்களுக்கு அதிகாரம் இல்லையே? ஒரு இடைநிலைச் சாதி அமைச்சரிடம் வந்து இறைஞ்சிக் கேட்டுப் பெற வேண்டுமா? என்கின்றனர்.
இவ்வாறு சொல்லுவதில் சிலருக்கு உள்நோக்கங்களும் பிற அரசியல் நலன்களும் இருந்தாலும் கூட இவ்வாதங்கள் இளந்தலைமுறை தலித் செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் செல்வாக்குப் பெற்றே வருகின்றன.
இதனைத் திமுக புரிந்துகொள்ளவில்லையா? அல்லது புரிந்தும் அவற்றைச் சிந்திக்கவோ செயலாக்கவோ இயலவில்லையா? என்றால் ஏன்? இந்தப் பகுப்பாய்விற்கு முற்பட்டால் மட்டுமே திராவிட இயக்கமான திமுக அடுத்தகட்டத்திற்கு நகர்ந்திட இயலும். இதுபோன்ற விமர்சனங்களைச் சந்தித்த நீதிக்கட்சி திராவிடர் கழகமானபோதும் பின் திமுகவாகக் கிளைத்தபோதும் இவ்வகையான கருத்துகள் இருக்கவே செய்தன. ஆனால் அவற்றைக் கடந்தும் நீதிக்கட்சி திக-திமுகவானபோதும் அம்மக்களிடம் அவ்வியக்கங்கள் சென்றடைந்தன. எனில் அதுபோல திமுக தன்னை மீள் கட்டமைப்புச் செய்து ஆய்வுக்கு உட்படுத்தி மீண்டும் அம்மக்கள் செல்வாக்கைப் பெற முடியுமா? முயற்சிக்குமா?
