அரசியல் செய்வது, அரசியல் பயில்வது, அமைப்பாகத் திரள்வது, இயக்கமாக இணைவது, கட்சி நடத்துவது என்பனவெல்லாம் சாலையிலே நடந்து, பரப்புரை செய்து, மக்களைச் சந்தித்து விளக்கி, உரிமைகளை உணர்த்தி, உணர்வாலும் உடலாலும் உழைத்து, ஆர்ப்பாட்டம் – போராட்டம் நடத்திச் செயல்படுவது என்பது பொருத்தமற்றதாக ஆகிவிட்டதா?
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவின் தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அடுத்தகட்டமாக அவர்கள் என்ன வகையான முடிவுகள் எடுக்கவுள்ளனர்? இவ்வாறான பேச்சுகள் அம்முடிவுகளில் தாக்கம் செலுத்துமா?


“Go to the people. Live among them. Learn from them. Love them. Serve them. Plan with them. Stand with what they know. Build on what they have” என்பது திராவிட இயக்கத்திற்கான தேர்தல் பாதையை வகுத்த பேரறிஞர் அண்ணா கொடுத்த வழிகாட்டல். உலகம் முழுவதும் இடதுசாரி அரசியலை முன்னெடுத்த தலைவர்கள் வாழ்வில் கிடைக்கப்பெறும் செய்தியும் இது தான்.
ஆனால் மக்களிடம் செல்லுவதில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நிறைய மாற்று வழிகளைத் தந்துள்ளது. இணையதள வசதி வெகுமக்களைச் சென்றடைந்த பிறகு நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தகவல் தொடர்புக்கு இன்றியமையாத வழியாக சமூக வலைதளங்கள் மாறியுள்ளன.
செய்தித் தாள்கள், வானொளி, தொலைக்காட்சி, செல்போன்கள்/அலைபேசிகள், சமூகவலைதளங்கள் என்ற பரிணாம வளர்ச்சி தற்போது கட்டற்ற வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
இவையெல்லாம் கூடுதல் தகவல் தொடர்பு வழிகளாகவே அரசியல் கட்சிகளால் பயன்படுத்தப்படுகின்றன. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற அதிகாரத்தை பாஜக கைப்பற்றியது தொடர்பான ஆய்வுகள் இந்தத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பாஜக எப்படியெல்லாம் சிறப்பாகக் கையாண்டது என்று வெளிப்படுத்தின. நளின் மேத்தா எழுதிய ‘தி நியூ பிஜேபி’ என்ற புத்தகம் அதில் மிக முக்கியமானது.
தற்போது 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையை தவெக கைப்பற்றிய பிறகு அவ்வாறு திட்ட வகையிலான ஆய்வுகள் இல்லாத நிலையில், அதன் தாக்க மதிப்பீடுகளின் முதல்நிலைத் தகவல்களின் அடிப்படையிலேயே இது இன்ஸ்டாகிராம் தந்த வெற்றி என்ற முடிவுகள் எட்டப்பட்டு அதனைத் தலைவர்கள் பேசவும் தொடங்கிவிட்டனர்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று ‘TOP DOWN APPROACH’ எனப்படும் மேலிருந்து கீழாக நடந்ததே இந்த ஆட்சி மாற்றம் என்ற கருத்தாக்கமும் இதனுள் புதைந்து கிடக்கிறது. அதனைப் பிறகு சிந்தித்து விவாதிக்கலாம்.
இது இன்ஸ்டாகிராம் வெற்றி என்ற பிரகடனத்தின் மூலமும் விமர்சனத்தின் மூலமும் தாங்கள் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளைத் திமுக எப்படித் திட்டமிடப் போகிறது என்பது வெறுமனே திமுகவின் எதிர்காலம் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல் போக்கின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடியதாக அமையும்.
இந்தியத் தேர்தல்கள் தொடர்ந்து மக்களிடமிருந்து விலகியபடியே இருக்கின்றன. தேர்தலுக்கும் மக்களுக்கும் இடையே இருந்த நிறைய விஷயங்கள் காலப்போக்கில் அகற்றப்பட்டு வருகின்றன. விடிய விடிய நடந்த தேர்தல் பரப்புரைகள் தற்போது இரவு 10 மணியோடு நிறைவடைகின்றன. விடிய விடியக் காத்திருந்த மக்கள் தற்போது யாராவது பணம் பொருள் கொடுத்து அழைத்தால் வரும் நிலைக்கு வந்துள்ளனர். தேர்தலின் போது சாலைகளில் வைக்கப்பட்ட பெரிய பாதாகைகள் தற்போது தடை செய்யப்பட்டவை. சுவர் விளம்பரங்கள் நிறைய கட்டுப்பாடுகளுக்கு இடையே மிகக் குறைவாகவே செய்யப்படுகின்றன. வீடுவீடாகச் சென்று தனித்தனி நபர்களையும் சந்தித்து நடந்த தேர்தல் பரப்புரைகள் பாய்ண்ட் டூ பாய்ண்ட் ஆக மாறி, தற்போது வாகன உலாவாக மாறிவிட்டன. பெரும்பாலும் அடையாள ஊர்வலங்களாகச் சுருங்கிவிட்டன. இதற்கிடையே சமூக வலைதளப் பரப்புரைக்கான கவனம் அதிகமாகி வந்துகொண்டுள்ளது. அதீதமாகிய சமூக வலைதள விளம்பரங்களில் நேரடி மற்றும் மறைமுகம் என இரண்டு வழிகள் நடக்கின்றன.
இவையெல்லாம் தேர்தல் காலம் தொடர்பானவை மட்டுமே. இதே போல தேர்தல் அல்லாத காலத்தில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மாறக்கூடுமோ என்று தோன்றுகிறது. தேர்தலுக்கு முன்பும், தேர்தலின்போதும், தேர்தலுக்குப் பிறகும் மக்களை நேரடியாகச் சந்திக்காத கட்சியாக தமிழ்நாட்டின் புதிய ஆளும் கட்சியான தவெக உள்ளது. ‘குறைவான மக்கள் சந்திப்பு, அதீத மோகம்’ என்பதைத் தங்கள் தாரக மந்திரமாகவே தவெகவின் வியூக வகுப்பாளர்கள் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தளத்திற்கு பேட்டி கொடுத்துள்ளனர். இந்த வியூகத்தின்படியே பல பரப்புரைக் கூட்டங்களுக்கு அனுமதி கிடைத்தும் கடைசி நேரத்தில் அவை இரத்தும் செய்யப்பட்டதாகக் கூறுகின்றன. அத்தோடு இந்த இரத்துச் செய்தியும் அதற்கான போலியான காரணங்களும் கூட சமூக வலைதளங்களின் வழியாக விஜய் மீதான இரக்கம்/கழிவிரக்கம் ஏற்படுத்தப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறாக மக்களிடம் நேரடித் தொடர்பிலிருந்த தேர்தல் அரசியல் கட்சிகள் படிப்படியாக தேர்தல் களத்தில் சுருக்கப்பட்டன. வேட்புமனு தாக்கல் செய்தல், வாக்குப் பதிவு நடத்தல், எண்ணுதல், அறிவித்தல் என்பவை மட்டுமே தற்போது வரை மாற்றமற்றதாகக் களத்தில் உள்ளன. இனி வரும் காலங்களில் இவையும் கூட இன்னும் மாறக்கூடும்.
இந்த மாற்றம் – களத்தில் குறைவாகவும் செல்போனில் முழுமையாகவும் என தேர்தல் கட்சிகள் மாறுவது மக்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? விரிவாக அடுத்தடுத்த கட்டுரைகளில் விவாதிக்கலாம்.
